தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கையாக அடையாளப்படுத்திக் கொண்ட வழக்கறிஞர்! - இடஒதுக்கீடு தான் தீர்வு தரும் என்கிறார் - LGBTQ என்றால் என்ன

LGBTQ Special Story: சமூக நீதி பேசும் அரசு, உண்மையாகவே சமூக நீதி வழங்குவதாக இருந்தால், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திருநர் சமுதாய மேம்பாட்டாளர், திருநங்கை பானு தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திருநர் சமுதாய மேம்பாட்டாளர், திருநங்கை பானு
உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திருநர் சமுதாய மேம்பாட்டாளர், திருநங்கை பானு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 5:09 PM IST

Updated : Nov 20, 2023, 5:55 PM IST

சென்னை:ஆணென்றும் பெண்ணென்றும் பொதுவான வகைப்படுத்துதல்களுக்குள் வராத திருநர் பிரிவினர், இன்றும் சமூகத்திலும், வீடுகளிலும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் எத்தனை திருநர்கள் இருக்கிறார்கள் என எண்ணிப்பார்த்தாலே போதுமானது. இப்படி ஆணாக பிறந்து, உடலாலும் மனதாலும் தன்னை பெண்ணாக உணர்ந்தவர் தான் வழக்கறிஞர் கண்மணி. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆண் வழக்கறிஞராக பதிவு செய்திருந்தவர், தன்னை திருநங்கை என கடந்த வாரம் அறிவித்துக் கொண்டார்.

இத்தனை நாட்களாக அடையாளத்தை மறைப்பதற்கான அவசியம் என்ன? தற்போது அறிவிப்பதற்கான தேவை என்ன? என்ற கேள்விகளுடன் வழக்கறிஞர் கண்மணியை அணுகினோம். “ஒரு வழக்கறிஞராக நீதிமன்றங்களில் ஆஜரானாலும், தன்னை திருநங்கையாக அறிவிப்பதில் சில தயக்கங்கள் இருந்தன.

ஆனால், சமீபத்தில் உச்சநீதிமன்றம், தன்பாலினத்தவர்கள் சேர்ந்து வாழ்வது குற்றமாகாது என அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றமும் LGBTQ சமுதாயத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களின் இந்த நடவடிக்கையால் சமுதாயத்தில் திருநர் மீதான தவறான புரிதலும் கண்ணோட்டமும் மாற தொடங்கியுள்ளது.

திருநர், பாலியல் தொழிலில் மட்டும் தான் ஈடுபடுவார்கள் என்ற நிலை மாறி, அனைத்து வேலைக்கும் தகுதியானவர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பமும் சமுதாயமும் ஒதுக்கும் போது, எப்படி அதை எதிர் கொள்வது என்ற பயத்தால் வெளிப்படையாக தன்னை இதுவரை திருநங்கை என அறிவிக்கவில்லை. ஆனால், இனி தனது அடையாளத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் வெளிப்படுத்தினேன்” என்று தெரிவித்தார்.

சமுதாய பார்வை இன்னும் மாறவில்லை:மேலும், திருநர் சமுதாய வளர்ச்சிக்காக, நீதிமன்ற உத்தரவின் படி, குடும்ப ஒப்பந்த சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். பெயரளவில் உள்ள திருநர் நலவாரியத்திற்கு கொள்கைகள் வகுக்க வேண்டும். கொள்கைகள் இல்லாததால் மாநில அளவில் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த 2015ல் (MBC) பொதுவான இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். திருநர் மீதான சமுதாய பார்வை இன்னும் மாறவில்லை.

வீடு மற்றும் சமுதாயம் தங்களை தொடர்ந்து ஒதுக்குகிறது. பெரிய நகரங்களில் தொடரும் இந்த நிலை, கிராமப்புறங்களில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதனால், தன்பாலினத்தவர்கள் திருமண சட்டம் இயற்றப்படும் வரை திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கான குடும்ப ஒப்பந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதற்கு முன் அனைத்து சமுதாயத்தினருடனும் கலந்து ஆலோசித்து விதிகளை வகுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள்:நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என திருச்சி சிவா முன்மொழிந்தார். ஆனால் அது சட்டமாக இயற்றப்படவில்லை. மத்திய அரசு, திருமணம் என்பதை புனிதமாக பார்கிறது. ஒரே பாலினத்தவர் சேர்ந்து வாழ்ந்தால் திருமணத்தின் புனிதம் கெட்டு விடும் என்ற தவறான புரிதலில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருவர் கூட இதுவரை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்தல் சமயங்களில் வாக்குக்காக அறிவிப்புகள் வெளியிடுவதை விட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

6 மாவட்டங்களுக்கே நிதி: திருநர் சமுதாய மேம்பாட்டாளர், திருநங்கை பானு, “சமுதாயத்தில் அனைவரின் மேம்பாட்டுக்காக திட்டங்கள் கொண்டு வரும் அரசு, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என தனி எதுவும் செய்வது இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, திருநர்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. வருடத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து பயன் பெறுகின்றனர்.

குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே 50 ஆயிரம் ரூபாய் மானியத்தில் சிறு தொழில் தொடங்க நிதி வழங்கப்படுகிறது. மற்ற உறுப்பினர்களுக்கு கிடைப்பது இல்லை. இந்த 2023 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட திருநர்களுக்கு மட்டுமே அரசின் நிதி கிடைக்கிறது. அதனால், திருநர்களுக்கு வருடத்திற்கு குறைந்தது 20 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். கடமைக்காக நிதி ஒதுக்கீடு செய்யாமல் மேம்பாட்டுக்காக செய்ய வேண்டும்.

அரசியலில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: அரசு நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவிதை விட, சமுதாயத்தால் ஒதுக்கப்படும் திருநர்களின் உரிமைக்காக கவனம் செலுத்த வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே மாத உதவித்தொகை 1,500 ரூபாய் கிடைக்கிறது. மற்றவர்களின் நிலை என்ன என்பதை அரசு யோசிக்க வேண்டும். மத்திய அரசு மாற்று பாலினத்தவர்களுக்கான பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்த நிலையில், அதற்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமூக நீதி பேசும் அரசு, உண்மையாகவே சமூக நீதி வழங்குகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. உண்மையாகவே மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படும் அரசாக இருந்தால், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் திருநர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசின் திட்டங்களை 100% பாமரனுக்கு கொண்டு செல்வது தான் டிஜிட்டல் இந்தியா திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Last Updated : Nov 20, 2023, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details