கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைச் சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பியில் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இதில், பயங்கரவாதிகளுக்கு, சிம்கார்டுகள் சப்ளை செய்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ், அன்பரசன், அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஒன்பது பேரை ‘கியூ’ பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர்களில் ராஜேஷ், ஜாமீன் கோரி சென்னையிலுள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இதில், ராஜேஷுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து கியூ பிரிவு துணை கண்காணிப்பாளர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், போலியான முகவரி, புகைப்படம், ஆவணங்களை பெற்றுக்கொண்டு பயங்கரவாதிகளுக்கு அதிக விலையில் சிம்கார்டுகளை வழங்கிய ராஜேஷ், தெரிந்தே இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.