சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச.25) உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை:இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் நாள் கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. அந்த வகையில், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்புப் பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்று, அதிகாலையில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
கிறிஸ்துமஸ் சிறப்பு ஏற்பாடு: குழந்தை இயேசு தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் அழகிய வடிவமைப்புகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. சென்னை சாந்தோம் பேராலயத்தில் மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கிறிஸ்துமஸ் திருப்பலி நிறைவேற்றினார். இதில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
கத்தோலிக்க தேவாலயங்கள்: இதேபோல் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் பரிசு: இது மட்டுமின்றி, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தேவாலயங்களான, வேளாங்கண்ணி தேவாலயம், திருநெல்வேலி அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் கொண்டாடப்பட்டது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் சிறுவர்கள், இளைஞர்கள் வயதானவர்கள் என்று ஏராளமான மக்கள் குடும்பமாக வருகை தந்து, கிறிஸ்துமஸ் தின பாடல்களைப் பாடி, சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறியும், பரிசுகளை அளித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கிறிஸ்துமஸ் பாதுகாப்புப் பணி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை நகரம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அண்ணா சாலை, அண்ணா வளைவு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள் அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் தேவாலயங்களுக்குக் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:வண்ண விளக்குகளால் ஜொலித்த தேவாலயங்கள்..கோவையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை