சென்னை:துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள டி.பி.ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் மாணவர் அமைப்பினர், தொடர்ந்து போராட்டங்களையும் கோரிக்கையினையும் அரசுக்கு முன்வைத்திருந்தனர். மேலும் அரசு உதவி பெறும் துறைகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தில் மாணவர்களை சேர்க்க மறுத்து, சுயநிதி கட்டணத்தில் மட்டுமே மாணவர்களை அனுமதிப்பதாக டி.பி.ஜெயின் கல்லூரி மீது குற்றசாட்டு எழுந்தது.
இதனால் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம்,கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அரசு உதவிபெறும் டி.பி.ஜெயின் கல்லூரியில் சேரமுடியாத நிலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே இக்கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுப்பப்பட்ட நிலையில், தற்போது தனி அலுவலரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தனி அலுவலராக கே.சி.எஸ். காசி நாடார் கல்லூரியின் பொருளியல் பேராசிரியர் சந்தோஷ் டி.சுரானா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கல்லூரியின் மேலாண்மைக்குழு கலைக்கப்படுவதாகவும் உயர்கல்வித்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி அலுவலர் ஓராண்டு காலத்துக்கு பதவியில் இருப்பார் என கூறப்படுகிறது.
அரசு உதவி பெறும் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையே நடத்தாமல் இருந்தது குறித்து அரசு விளக்கம் கேட்டது. அப்போது, அரசு உதவி பெறும் பேராசிரியர்களை திரும்ப பெற்றுக் கொண்டு சுயநிதி கல்லூரியாக செயல்பட அனுமதிக்கக் கல்லூரி நிர்வாகம் கோரிக்கை வைத்தது. ஆனால் அதனை அரசு ஏற்க மறுத்து, கல்லூரி மேலாண்மைக் குழு கலைக்கப்பட்டு தனி அலுவலரை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்