சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நவம்பர் 5ஆம் தேதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
விருகம்பாக்கம் சட்டமன்றத்தொகுதி கலைஞர் நகரில் உள்ள ராணி அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.
மேலும், அந்தந்த பகுதிகளில் நடைபெறும் அனைத்து மருத்துவ முகாம்களையும் அதற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.
சென்னை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள வட்டங்களில் தலா ஒன்று விதம் 200 இடங்களில் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. வடகிழக்குப்பருவமழை அதிகமாக பெய்து வரும் காரணத்தினால் பருவமழைக்கால நோய்களான டெங்கு, ப்ளூ என்கின்ற இன்புளூயன்சா, காலரா, டைபாய்டு, சேற்றுப்புண் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நடத்தவுள்ளது.