சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்கள் இன்று (டிச.14) நடத்தப்பட்டு வருகிறது.
மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் தொடர்ந்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நிலையில், மக்கள் மருத்துவம், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் வடிகால்கள் சீரமைக்கப்படுவதே வெள்ளப் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்
வெள்ளத்தால் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் சென்னை மக்களுக்கு, அரசாங்கம் மற்றும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து, நடிகர்களும் உதவிகளை செய்து வருவதை பார்க்க முடிந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களைத் தடுக்கும் நோக்கில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (டிச.14) நடத்தப்பட்டு வருகிறது.
தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த சிறப்பு மருத்துவ முகாமினை 132வது வட்டம், காமராஜ் காலனி 1வது தெரு, கோடம்பாக்கம், தி.நகர் ஆகிய தொகுதிகளில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று காலை 8.05 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த மருத்துவ முகாமில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் பிற பகுதிகள் என மொத்தம் 24 இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் இணைந்து பொதுமக்களுக்கு சிகிச்சையும், ஆலோசனையும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. முதலமைச்சருடன் மத்திய குழு இன்று ஆலோசனை!