தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருமான வரி குறைக்கப்படுமா, பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன? - பொருளாதார நிபுணரின் சிறப்புப் பேட்டி - Economist Nagappan

சென்னை: 2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் வருமான வரி குறைக்கப்படுமா? வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்குமா? என்பதுதான் பட்ஜெட்டில் பலரும் எதிர்பார்த்திருக்கும் முக்கிய அம்சமாக உள்ளது.

budget
budget

By

Published : Jan 23, 2020, 11:33 AM IST

மத்திய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர் நாகப்பன் ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். பட்ஜெட் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு...

வரியைக் குறைக்க வாய்ப்பில்லை:

பட்ஜெட்டில் வருமான வரியைக் குறைக்க வாய்ப்பில்லை. தற்போதைய சூழலில் வருமான வரியைக் குறைப்பதற்கான தேவை இல்லை. வருமான வரியைக் குறைத்து பொது மக்கள் கையில் அதிக பணம் கொடுப்பதால், அவர்கள் அதை செலவு செய்வார்கள். அதன்மூலமாக நுகர்வு அதிகரிப்பதோடு அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்கின்றனர். ஆனால், வட்டி விகிதங்கள் குறைந்துவரும் இன்றைய சூழலில் வருமான வரியைக் குறைத்தால் மக்கள் செலவு செய்வதைவிட சேமிப்பதிலேயே கவனம் செலுத்துவர்.

முதலீடுகள் அதிகரிக்க:

பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றால் அரசு மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மூலதனம் தேவைப்படுகிறது. இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை மட்டுமே சார்ந்திருக்காமல், டாக்ஸ் ஃப்ரீ பாண்டு என்று அழைக்கப்படும் வருமான வரியில்லாத கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும். (டாக்ஸ் ஃப்ரீ பாண்டு என்பது வருமான வரி கட்டுவதைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கான வரி இல்லாத பாண்டுகள் ஆகும்) வரியில்லாததால் முதலீட்டாளர்கள் தைரியமாக முதலீடு செய்வார்கள். அரசும் தனக்குத் தேவையான நிதியைத் திரட்டமுடியும்.

சந்தை எதிர்பார்ப்பு:

இன்றைய காலகட்டத்தில் பங்குச் சந்தைகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நம்பியே உள்ளது. அவர்கள் பணத்தை வெளியே எடுத்தால் சந்தை சரிவை சந்திக்கிறது. ஆனால், நமக்குத் தேவையான பணம், மூலதனம் அனைத்தையும் உள்நாட்டிலேயே திரட்டமுடியும். இதனால் அரசு உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கவேண்டும். இதனை உணர்ந்து தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை களையும் வேளையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இரட்டை விரி விதிப்பு:

தற்போது முதலீட்டாளர்கள் 'எஸ்டிடி' என்று அழைக்கப்படும் பங்குகளை விற்கும்போதும், வாங்கும்போதும் வசூலிக்கப்படும் பங்கு பரிவர்த்தனைகளுக்கான வரியையும் கட்டுகிறார்கள். பங்குகளை விற்று லாபம் சம்பாதிப்பவர்கள், நீண்டகால மூலதன ஆதாயத்திற்கான வரியையும் கட்டுகிறார்கள். இதனால் இரட்டை வரி விதிப்பு முறை உள்ளது. இதில் ஏதேனும் ஒரு வரியை நீக்க வேண்டும். இதில் பங்கு பரிவர்த்தனை வரியை லாபம் ஈட்டுபவர்களும், நஷ்டம் சம்பாதிப்பவர்களும் கட்டுவதால் அதனை நீக்கினால் சிறந்தது.

#Budget 2020 - 2021

வேலைவாய்ப்பு:

வேலைவாய்ப்பு தொழில்நுட்ப மாற்றத்தால்தான் அதிகம் ஏற்படுகிறது. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் அரசுத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவேண்டும். இதையும் தாண்டி வேலையிழப்புகள் இருக்கத்தான் செய்யும். இதனை தாமதப்படுத்த முடியுமே தவிர தவிர்க்க முடியாது.

இதையும் படிங்க:நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது - பொருளாதார நிபுணர் ராஜேந்திரகுமார்

ABOUT THE AUTHOR

...view details