சென்னை:இந்த ஆண்டு ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை மற்றும் வார விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்டம் கூட்டமாக படையெடுத்துச் சென்றனர். அதற்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில், மெட்ரோ நேரம் அதிகரிப்பு என பயணிகளின் வசிக்காக பலவற்றை போக்குவரத்து துறை மற்றும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக (அக்.24) இன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,213 சிறப்புப் பேருந்துகளாக மொத்தம் 3,313 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்குச் செல்லும் வகையில் 1,846 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் என அறிவித்ததால், பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னைக்குத் திரும்பி வரும் பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி, தங்களது பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கோலாகலத் துவக்கம்!