சென்னை: உலகின் மிகவும் நீளமான இரண்டாவது பெரிய கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ள மெரினா கடலின் அழகை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்கும் வகையில்,சென்னை 2.0 திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு 3 அடி அகலம், 263 மீட்டர் தொலைவிற்கு ரூபாய் 1.14 கோடி செலவில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் 27ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த நிலையில் 'மாண்டஸ்' புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் மரப்பலகையால் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை உடைந்து சேதம் அடைந்தது. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள நடைபாதை பலத்த சேதம் அடைந்துள்ளது.
திறந்து வைத்து 10 நாட்களுக்குள் இதுபோன்று சேதமடைந்தது மிகவும் வேதனை ஆக உள்ளது என சமூக வலைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவிட்டு வந்தனர். அது மட்டும் இல்லாமல் கடலோர ஒழுங்கு மண்டலம் சார்பில் நடைபாதை அமைப்பதற்கான அனுமதியில் "கடல் மண்ணிற்கு ஏற்றவாறு மறுசுழற்சி செய்யப்பட்ட மரப்பலகையை இணையாக வைத்து இந்த பாதை அமைக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதை வைத்து ஏன் மரத்தால் அமைத்திருக்கிறார்கள், செய்வதை திருந்த செய், என்று எல்லாம் சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மாநகராட்சி ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.
மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்புப்பாதை புயலால் சேதம் - சென்னை மாநகராட்சி விளக்கம் அந்த ட்விட்டர் பதிவில், " இந்தப் பாதை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மரப்பலகை அல்லாமல் மற்ற பொருட்களில் அமைத்திருந்தால் ஆமைகள் முட்டை போடுவதற்கு ஏதுவாக அந்த இடம் இருக்காமல் போய்விடும். இதற்கு காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மரப்பலகை அமைக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த மரப்பலகை எப்போது வேண்டுமானாலும் தனியாக பிரித்து எடுத்து மீண்டும் பாதையாக அமைத்து விடலாம். அத்தகைய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கடல் 20 மீட்டர் உள்வாங்கி 10 மீட்டர் அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்து விட்டனர். விரைவில் சரி செய்யப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க:மாண்டஸ் புயல் தாக்கம் எதிரொலி: சென்னை வந்த 9 விமானங்கள் ஹைதராபாத்துக்கு மாற்றம்