பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிபிசிஐடி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்தார். அந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வே விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி அனுமதி அளித்ததன் அடிப்படையில், வழக்கு கடந்த 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த பெண் அலுவலரைத் தடுத்தார் என எஸ்.பி.-யை மட்டும் சஸ்பெண்ட் செய்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணையை உயர் நீதிமன்றம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், அரசியல் கட்சியினர், ஊடகங்களில் பெயர்களை வெளியிடக்கூடாது, பயன்படுத்தக் கூடாது எனவும் தடை விதித்திருந்தார்.
இந்நிலையில் இன்று, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி சார்பில் இந்த வழக்கில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது நீதிபதி, சிறப்பு டிஜிபியை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை என கடந்த முறை கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:சிசிடிவி காட்சி: கடலூர் துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவி படுகொலை