தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் எஸ்பி பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் - சிபிசிஐடி அலுவலகம்

பெண் எஸ்பி பாலியல் வழக்கு
பெண் எஸ்பி பாலியல் வழக்கு

By

Published : Mar 13, 2021, 11:20 AM IST

Updated : Mar 14, 2021, 6:08 AM IST

11:14 March 13

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சம்மந்தப்பட்ட காவல் உயர் அலுவலர் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.

முதலமைச்சர் சுற்றுப் பயணத்தின் போது பாதுகாப்பிற்காக வந்த சிறப்பு டிஜிபி,  பெண் எஸ்.பி ஒருவரை  காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி சிறப்பு டிஜிபி மீது தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் புகார் அளித்தார்.

இதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி புகார் அளிக்க வரும் போது, புகார் அளிக்கவிடாமல் தடுத்து நிறுத்தி, செங்கல்பட்டு எஸ்.பி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிறப்பு டிஜிபி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில்  10க்கும் மேற்பட்ட பெண்  எஸ்.பி அலுவலர்கள் டிஜிபியை சந்தித்து சிறப்பு டிஜிபியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க பெண் ஐ.ஏ.எஸ் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. உடனடியாக சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், செங்கல்பட்டு எஸ்.பியை பணியிட மாற்றம் செய்தனர். பின்னர் சஸ்பெண்ட் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். மேலும் பெண் எஸ்.பி பாலியல் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 12) சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெண் எஸ்.பியை தடுத்து நிறுத்திய எஸ்.பியை சஸ்பெண்ட் செய்த காவல்துறை, சிறப்பு டிஜிபியை சஸ்பென்ட் செய்யாதது ஏன் என சிபிசிஐடி, காவல்துறையினருக்கு கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், துரிதமாக விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி சிபிசிஐடி காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில், நேற்று (மார்ச் 13) விசாரணைக்காக சிறப்பு டிஜிபி காலை 10 மணியளவில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறப்பு டிஜிபியை விசாரணை அலுவலரான எஸ்.பி முத்தரசி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Last Updated : Mar 14, 2021, 6:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details