தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்! - ஈடிவி பாரத் தமிழ்நாடு

voter id special camp in tamil nadu: தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றிற்கு நவம்பர் மாதம் 4,5 மற்றும் 18,19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் எற்பாடு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

special-camp-for-enrollment-deletion-corrections-change-of-address-in-tn-voter-list
வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க என்ன செய்ய வேண்டும்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 6:47 PM IST

சென்னை: 2024நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிசத்ய பிரதா சாகு இன்று (அக்.27) வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஜனவரி இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிசத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "தமிழ்நாடு முழுவதும் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக வாக்குச் சாவடிகளில்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் எங்கே பெற வேண்டும்? 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் மற்றும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் சமர்ப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எப்போது? எங்கே சமர்ப்பிக்க வேண்டும்?வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம் மற்றம் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றிற்கான படிவம் 6, 6B, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து 27.10.2023 முதல் 09.12.2023க்குள் கீழ்க்கண்ட அலுவலகங்களில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.
  • சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச் சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.
  • அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்ன?வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். முகவரிச் சான்றாக கீழ்க்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்,

  • முகவரிக்கான நீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீது. (குறைந்தது 1 வருடத்திற்காவது)
  • ஆதார் அட்டை.
  • தேசியமயமாக்கப்பட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி, அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம்.
  • கடவுச் சீட்டு.
  • விவசாயி புத்தகம் உட்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள்.
  • பதிவுசெய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம். (குத்தகைதாரராக இருந்தால்)
  • பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம். (சொந்த வீடு எனில்)

வயதுச் சான்றுக்கு அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்ன?

  • தகுதிவாய்ந்த உள்ளாட்சி அமைப்பு, நகராட்சி அதிகாரி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் வழங்கிய பிறப்பு சான்றிதழ்.
  • ஆதார் அட்டை.
  • பான் அட்டை.
  • ஓட்டுநர் உரிமம்.
  • சிபிஎஸ்இ/ ஐசிஎஸ்இ/ மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள்.
  • இந்திய கடவுச் சீட்டு.

25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரர்கள் வயதுச்சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?https://voters.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் "வாக்காளர் உதவி" கைபேசி செயலி (VOTER HELP LINE Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர்களும் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?01.01.2024, 01.04,2024, 01.07.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6ன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் படிவத்திலுள்ள உறுதிமொழியினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வாக்காளரின் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் விதமாக விண்ணப்பதாரர்கள் 200 dpi resolution கொண்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வாழும் வாக்காளர்கள் விண்ணப்பிப்பது எப்படி? வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படவேண்டும் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் நுழைவிசைவின் (Visa) செயல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய கடவுசீட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளிநகலையும் சேர்த்து அளிக்கவேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல கடவுசீட்டினை ஒப்பிட்டுச் சரிபார்த்து உடனடியாக திரும்பக் கொடுத்துவிடுவார். படிவம் 6A தபாலில் அனுப்பப்படும்போது, கடவுசீட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது எப்படி? ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி-ல் விண்ணப்பிக்கலாம். 26.10.2023 அன்று வரை, தமிழகத்தில் 4.23 கோடி (69.21%) ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? தான் வசிக்கும் இருப்பிடத்தை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் பெயர்ந்தாலோ அல்லது வாக்காளரின் விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது இடம் பெயர்தல், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டியிருந்தாலோ படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்.. உங்களது பெயர் பட்டியலில் உள்ளதா? உடனே செக் பண்ணுங்க!

ABOUT THE AUTHOR

...view details