தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி தலைமையில் இன்று (மார்ச் 23) தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில், காவல்துறை உயர் அலுவலர்கள், துறை அலுவலர்கள், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 01.04.2021 முதல் 05.04.2021 வரையிலான நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என ஆகமொத்தம் 14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படும்.
கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2, 644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 01.04.2021 முதல் 03.04.2021 வரையில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகள், மற்றும் சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.