சென்னை:தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் (TN School Reopen) இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டன. இதற்காக போக்குவரத்து துறையும் மாணவர்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க தயார் நிலையில் உள்ளது. இதற்காக 1500 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலின் படி, 'ஜூன் 9, 2023 அன்று வார இறுதி நாட்கள் மற்றும் ஜூன் 12 அன்று பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் வருடம் பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் 12 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்க இருப்பது மற்றும் இந்த வார இறுதி நாட்களான இன்று முதல் 11 ஆம் தேதி வரையிலான (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) மூன்று தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1,500 பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.