சென்னை:தொடர் விடுமுறையை (ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (அக்.22) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் கூடுதலாக 239 பேருந்துகளும், கடந்த 3 நாட்களில் மொத்தம் 8 ஆயிரத்து 3 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 180 பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதைத் தொடர்ந்து, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்று தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், வெளி ஊர் மற்றும் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கும் மக்கள் அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்றனர். இதில் மாநிலம் முழுவதும் பெரு நகரங்களில் இருந்து கிராமங்கள் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, உதவும் வகையில் போக்குவரத்து சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள், கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பிரிக்கப்பட்ட நிறுத்தங்கள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.