தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் ஒவ்வொரு ஆண்டும் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்படும் நிலையைப் பார்க்க முடிகிறது. இதனை தவிர்க்க தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக இந்த ஆண்டு 12 ஆயிரத்து 575 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக 12,575 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சென்னை: தீபாவளி பண்டிக்கைக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக 12ஆயிரத்து 575 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பூந்தமல்லியிலிருந்து வேலூர், காஞ்சிபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் அந்தந்த பகுதிகளில் இயக்கப்படுவதால் நகருக்குள் அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடி இருக்காது, பயணிகளும் சிரமமின்றி பயணிக்க முடியும். மேலும், எந்த மார்க்கத்திற்கு பேருந்துகள் அதிக அளவில் தேவைப்படுகின்றனவோ அதற்கேற்ப பேருந்துகளை அதிகரித்து இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.