சென்னை:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள். இதில் சென்னை, புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், தங்களது பயணைத்தை சில நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெங்களூரூவில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்," தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு மொத்தம் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும், மற்றும் அங்கு இருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
அதே போன்று, குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையினை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு!