சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இதில் கவனக்குறைவாக செயல்பட்ட பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மாணவி பிரியாவின் மரணம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் "பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தினம்தோறும் டி.எம்.எஸ், டி.பி.ஹெச் போன்ற மூன்று துறைகளிலும் ஏறக்குறைய 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
இந்த அறுவை சிகிச்சைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் இது போன்ற கருத்தரங்கம் நடத்த இருக்கிறோம்.