தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நிலநடுக்கம் ஏற்படுமா? - புவியியல் துறை பேராசிரியர் சிறப்பு தகவல் - Turkey Earthquake scientist name

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு பேரிடரை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில், குறிப்பாக சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து புவியியல் துறை பேராசிரியர் இளங்கோ அளித்த சிறப்பு தகவல்களை பார்க்கலாம்..

சென்னையில் நிலநடுக்கம் ஏற்படுமா? - புவியியலாளர் சிறப்பு பேட்டி!
சென்னையில் நிலநடுக்கம் ஏற்படுமா? - புவியியலாளர் சிறப்பு பேட்டி!

By

Published : Feb 14, 2023, 9:09 AM IST

சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து புவியியல் துறை பேராசிரியர் இளங்கோ விளக்கம்

சென்னை:துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 35,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதனிடையே துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணித்திருந்தார்.

இந்த செய்தி நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த நிலையில், இந்தியாவின் புவியியல் அமைப்பு குறித்துப் பார்த்தால், இந்தியாவின் புவியியல் அமைப்பின் அடிப்படையில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வடகிழக்கு பகுதியில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகரங்கள் மண்டலம் 5இல் வருகிறது.

அதாவது அங்குத் தீவிரம் கொண்ட பூகம்பங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் பூமி தட்டும், சீனாவின் பூமி தட்டும் இமயமலைப் பகுதியில் சந்திக்கின்றன. இவைகள் மோதிக்கொள்ளும்போது நில அதிர்வுகள் காணப்படுகிறது. அதிர்வு மண்டலங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், எங்கு குறைவு என்பது பூமியின் தட்டுகளின்படி புவியியல் இயக்கங்களைச் சார்ந்து பிரிக்கப்படுகிறது.

இந்தியாவில் 5 நில அதிர்வு மண்டலங்களாக (மண்டலம் 2, 3, 4 மற்றும் 5) பிரித்துள்ளனர். மண்டலம் 5 என்பது மிகவும் தீவிரமான நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி ஆகும். அதேநேரம் மண்டலம் 2இல் மிகக் குறைந்த தீவிரம் கொண்ட நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்தியாவில் மண்டலம் ஒன்று நிலையில் எந்தப் பகுதியும் தற்போது இல்லை.

மத்திய இமயமலைப் பகுதியானது உலகில் நில அதிர்வுகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றாகும். 1905ஆம் ஆண்டில் காங்க்ராவில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் இளங்கோ ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “உலகப்பரப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரே தட்டாக விரிந்து இருந்தது. அந்த தட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நகர்ந்து, இன்று 7 தட்டுகளாக உள்ளது. பூமிக்கு அடியில் 100 முதல் 150 கிலோ மீட்டருக்கு கீழ் பாறைகள் உருகிய நிலையில் இருப்பதாலும், பூமியின் மையப்பகுதி உருகிய நிலையில் இருப்பதாலும், தட்ப வெட்பநிலை மாறுபடுவதாலும் தட்டுகள் நகர்ந்து கொண்டே செல்கிறது. அப்போது சில தட்டுகள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு இருக்கிறது.

தட்டுக்கள் மோதிக்கொண்டு இருக்கும் இடங்களில் நில நடுக்கம் வருவது சாதாரணமாக நிகழக்கூடியதுதான். உலகில் உள்ள7 பெரிய தட்டுகளுடன், 6 சிறிய தட்டுகளும் இருக்கிறது. இந்தத் தட்டுகள் மோதிக்கொண்டுதான் இருக்கும். நிலநடுக்கம் ஏற்படும்போது ரிக்டர் அளவுகோளில் 3 முதல் 4 வரை வந்தால் யாரும் பெரியதாகப் பேசுவதில்லை. ஆனால் 7 முதல் 8 என்ற அளவில் இருக்கும்போது பெரிய பாதிப்பு ஏற்படும். ரிக்டரில் 8க்கு மேல் பாதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது. அதிகபட்சமாக ரிக்டரில் 8.3 பாதிப்பு ஏற்படும். ரிக்டரில் 7 முதல் 8 வரை பதிவாகும் போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான நடவடிக்கை எடுத்தால் இது போன்ற பாதிப்பு தெரியாது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் தனித் தட்டாக இருக்கிறது. மொத்த இந்தியாவும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சீனாவின் திபெத்தியன் தகட்டினை நோக்கி நகர்கிறது. அந்த 2 தட்டுகளின் எல்லைக் கோடு இமயமலைதான். அதனால் இமயமலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்தியா மொத்தமும் ஒரே மாதிரியாக நகர்ந்து செல்லவில்லை. இதனால் உள் மாநிலங்களில், கடலோர மாநிலங்களில் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதி 5 வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப்பகுதிகளில் கட்டடங்கள், பாலங்கள் ஆகியவை பூகம்பத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் ரிக்டர் அளவில் 7 வரை வந்தாலும், பெரிய வீடுகளில் பாதிப்பு ஏற்படாது. சிறிய வீடுகளில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டுமானங்களைச் செய்திருக்கமாட்டார்கள்.

இதனால்தான் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு இருக்கும். நிலநடுக்கத்தை, ஏற்கனவே நில அதிர்வு ஏற்பட்ட காலத்தில் கோள் இருந்த இடத்தை வைத்துக் கொண்டும், தரவுகளை வைத்தும், காற்றின் அழுத்தத்தை வைத்தும் கணிக்க முயற்சிக்கின்றனர். காற்றழுத்தம், தண்ணீர் வைத்தும் கணிப்பதற்கும் முடியாது. இமயமலையில் நில நடுக்கம் ஏற்படும் என்பது புவியியலாளர்களுக்குத் தெரியும். நிலநடுக்கம் உலகில் எந்தப் பகுதியில் அதிகம் வந்துள்ளது என்பதை கண்காணிக்கிறோம். எங்கு நிலநடுக்கம் வந்தாலும், இந்தியாவில் இருந்தே கண்டுபிடிக்க முடியும். அதன் மூலமும், பூமியில் குளோபல் சிஸ்டம் என்ற ஜிபிஎஸ் கருவியை பூமியின் கீழ் பாறைக்கு கீழே பொருத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பூமிக்கு 100 கிலோ மீட்டருக்கு கீழே நிகழும் நிகழ்வை 3 நாட்களுக்கு முன்னர், நில அதிர்வை எதிர்பார்க்கலாம் என கூற முடியும். துல்லியமாக நிலநடுக்கத்தைக் கூற முடியாது. கணித்துக் கூறும்போது வராமலும் போகலாம். வானில் ஏற்படும் காற்றழுத்த மண்டலத்தை ரேடார் மூலம் பார்க்கிறோம். அது போன்று பார்க்க முடியாது.

பெரிய பூகம்பம் வருவதற்கு சில மணி நேரம், சில நாட்களுக்கு முன்னர் அறிகுறிகள் வரும். அதனை வைத்துக் கொண்டுதான் கூறுகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள வரிசையில் சென்னை 3ஆம் இடத்திலும், மற்ற மாவட்டங்கள் 2ஆம் இடத்திலும் உள்ளன. இந்தியா அமைந்துள்ள நிலப்பகுதிக்கு அடியில் உள்ள தட்டுகள் மில்லி மீட்டர் அளவில் நகர்கின்றன.

இதனால் தட்டுகளில் வேறுபாடுகள் தோன்றி இடைவெளி ஏற்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் நில அதிர்வினை தாங்கும் அளவிலான வடிவமைப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடங்களுக்கு மட்டுமே சிஎம்டிஏ அனுமதி கொடுப்பதால், பெரும் அளவிலான பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட முறையில் கட்டினால் நிலநடுக்கத்தின்போது ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்” என்றார்.

இதையும் படிங்க:"நிலநடுக்கத்தின்போது உயிரை பணயம் வைத்து குழந்தைகளை காப்பாற்ற முயன்ற செவிலித் தாய்கள்''

ABOUT THE AUTHOR

...view details