சென்னை:தமிழ்நாட்டில், வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையைத் தொடர்ந்து, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என நாளை(அக்.21) முதல் தொடர்ந்து 4-நாட்களுக்கு விடுமுறை என்பதால், அரசுத் துறை, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சென்னையில் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வேலை செய்பவர்கள் விடுமுறைக்காக அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை போல காணப்படுகிறது. கூட்ட நெரிசலை போக்கும் வகையிலும், மக்களுக்கான போதிய பாதுக்காபபை வழங்கவும் போக்குவரத்து துறை தற்காலிக பேருந்து நிலையம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்காலிக பேருந்து நிலையங்கள்:சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேட்டை தவிர, தாம்பரம் மெப்ஸ் மற்றும் பூவிருந்தவல்லி பைபாஸ் பகுதியில் இருந்தும் இன்று (அக்.20) முதல், 3 நாட்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பூவிருந்தவல்லி பைபாஸில்:மாநகர போக்குவரத்துக் கழக பூவிருந்தவல்லி பைபாஸ் அருகில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு: மேற்கூறிய ஊர்களைத் தவிர்த்து இதர ஊர்களான கோவை, திருச்சி, நாகர்கோவில், நாகப்பட்டினம், மதுரை, ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர், ஊட்டி உள்ளிட பிற மாவட்டங்களுக்கும், திருவனந்தபுரம், குருவாயூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கபடுகின்றன.