திராவிட மாடல் ஆட்சி தான் காமன்வெல்த் நாடுகளின் மையக்கருத்து - சபாநாயகர் அப்பாவு பெருமிதம் சென்னை: காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர் மாநாடு, ஆப்பிரிக்கா கண்டத்தின் கானா நாட்டில் நடந்தது. அந்த மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்ட தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, நேற்று (அக் 05) இரவு துபாய் வழியாக, எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தார்.
அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "66வது காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு ஆப்பிரிக்கா கண்டத்தின் கானா நாட்டில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்த, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
காமன்வெல்த் மாநாடு என்பது, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் மூலம் ஜனநாயகம் தளைக்க வேண்டும். மக்கள் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், திராவிட மாடல் ஆட்சிதான் காமன்வெல்த் நாடுகளின் மையக்கருத்து" என்று கூறினார்.
மேலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஓபிஎஸ் அணியினருக்கு இருக்கைகளை மாற்ற வேண்டும் என்று, இபிஎஸ் தரப்பு கூறியுள்ளது, நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "சட்டமன்றத்திற்கு வாருங்கள், அப்போது உங்களுக்குத் தெரியும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!