தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கரின் பெயரையே வாசிக்க மறுத்திருக்கிறார்.. ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது - சபாநாயகர் - Tamil News

'ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமேதை அம்பேத்கரின் பெயரையே வாசிக்க மறுத்திருக்கிறார், இது வேதனையான செயல்' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

By

Published : Jan 9, 2023, 3:56 PM IST

Updated : Jan 9, 2023, 6:29 PM IST

சென்னை:இந்த 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. அதன் பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "ஆளுநர் உரையுடன் தொடங்கிய 2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 13ஆம் தேதி வரை நடைபெறும்.

நாளை 10ஆம் தேதி சட்டமன்றம் கூடிய உடன், சட்டமன்றத்தில் பணியாற்றி மறைந்த திருமகன் ஈவேரா அவர்களின் மறைவுக்கும், அவரைப் போல இன்னும் பல தலைவர்களின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாளை முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும்.

அதன் பின்னர் 11, 12ஆகிய இரண்டு நாட்கள் ஆளுநர் உரை மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளனர். இறுதியாக 13ஆம் தேதி ஆளுநர் உரை குறித்து முதலமைச்சர் உரை நிகழ்த்துவார். ஆளுநர் இன்று செயல்பட்ட விதம் மன வேதனை அளிக்கிறது. கடந்த 5ஆம் தேதியே ஆளுநருக்கான உரை அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அதற்கு அவர் 7ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். அந்த உரையை தான் இன்று ஆளுநர் வாசித்தார். முன்கூட்டியே ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன், அந்த உரையில் எதையும் கூட்டவும் இல்லை. குறைக்கவும் இல்லை. தேசிய கீதம் முடிவதற்கு முன்பே ஆளுநர் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார். இது நியாயமா?.

அதிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே உருவாக்கிய அம்பேத்கரின் பெயரையே அவர் வாசிக்க மறுத்திருக்கிறார். இது எவ்வளவு வேதனையான செயல். திராவிட மாடல் என்பதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவர் அதைக் குறிப்பிடவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை மதிப்பதில் ஆளுநர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்நாடு என்று தான் உள்ளது. ஆனால், அதை தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என்பது ஆளுநரின் கருத்து. ஆனால், அது அவர் வகிக்கும் பதவிக்கு நல்லது அல்ல. பாரதிய ஜனதா அரசு ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசால் எழுதிக் கொடுக்கிற உரையைத் தான் குடியரசுத் தலைவர் அப்படியே வாசிக்கிறார். இது போல தான் தமிழ்நாடு அரசும் நடந்து கொண்டுள்ளது.

பிரதமர் தலைமையிலான அரசு ஒரு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால், அடுத்த நொடியில் அதற்கு ஒப்புதல் கிடைக்கிறது. இதே போல் பாஜக ஆளுகிற மாநிலங்களில் மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்புகிற தீர்மானங்களுக்கு அந்த மாநிலத்தில் இருக்கிற ஆளுநர்கள், உடனடியாக ஒப்புதல் கொடுக்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாநில சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்தால் அதை ஆளுநர்கள் கிடப்பில் போடுகிறார்கள்.

மேற்குவங்க மாநிலத்தில் ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், மாநில அரசுக்கு பல்வேறு இடையூறுகளை கொடுத்தார். அதன் அடிப்படையில் தான் அவருக்கு துணை குடியரசுத் தலைவர் பதவி கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:TN Assembly: தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி.. ஆளுநருக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

Last Updated : Jan 9, 2023, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details