சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒட்டியம்பாக்கம் கலங்கல் ஓடை நீர் வழித்தடத்தில், அடுக்குமாடிக்குடியிருப்பு ஆக்கிரமிப்புகளால், அரசன்கழனி, வேடந்தாங்கல் நகர், நேதாஜி நகர், போலினெனி மலை பகுதி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் DLF பகுதி உள்ளிட்ட இடங்களில் வடகிழக்குப்பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடிப்படையாகக் கொண்டு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதனிடையே இந்த வழக்கை நேற்று (ஏப்ரல்.8) விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதி துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், இனி வரும் காலங்களில், விவசாய நிலத்தை விவசாயம் தவிர்த்த மற்ற பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கும் போது அனைத்து விதிகளும் முறையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, புதிய வீட்டு மனைகளை உருவாக்கும் போது மழை நீர் வெளியேற்ற முறையான வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டும் எனவும், விதிகளை முறையாகப் பின்பற்றாத கட்டுமானங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குநரகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வெள்ளநீர், நீர்நிலைகளுக்குச் செல்ல ஏதுவாக போதுமான வடிகால் கால்வாயினை நீர்வள ஆதார அமைப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், வடிகால் கால்வாயினை ஆக்கிரமித்துள்ளவர்களிடம் அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.