சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோனோர் இந்த மின்சார ரயில்களையே பெரிதும் பயணம் செய்கின்றனர். காலை நேரத்தில் பெரும்பாலான வேலைக்கு, கல்லூரிக்கு மற்றும் பல தரப்பினர் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று இருக்கின்ற ரயிலில் ஏறுவதற்கு முண்டி அடித்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து வருகிறார்கள்.
'விரைவு மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம் வேண்டாம்' - தெற்கு ரயில்வே வேண்டுகோள்! - மின்சார ரயில்
2019-05-29 19:47:17
இந்நிலையில், ரயில்களில் பயணிகள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், தோள்களில் பைகளை சுமந்துகொண்டு படிக்கட்டு அருகிலேயும் நிற்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலையில் புறநகர் விரைவு ரயிலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்ற நான்கு பேர் தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்லும் பல்வேறு மின்சார விரைவு ரயில்கள் கடந்த 2018ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன.
தற்போது அந்த விபத்து ஏற்பட்ட பரங்கிமலை ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவருக்கும் ரயிலுக்கு கூடுதல் இடைவெளி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் தாம்பரம்-செங்கல்பட்டு-திருமால்பூர்- காஞ்சிபுரம் வரை மின்சார விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதால் பயணிகள் மின்சார ரயில்களில் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறும், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.