கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மாநிலத்துக்குள், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
பின்னர் நோய்த் தொற்று அதிகரித்ததால் சிறப்பு ரயில் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில், முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏழு சிறப்பு ரயில்களுடன் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் விரைவு ரயில், குமரி செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயில், தூத்துக்குடி செல்லும் முத்துநகர் விரைவு ரயில், செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் சேரன் விரைவு ரயில், மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி விரைவு ரயில் ஆகியவற்றை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக மத்திய ரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.