சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தசரா திருவிழா உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் காரணமாகச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுத்துப் பயணித்து வருகின்றனர். இதனால், பொதுவாகவே இது போன்ற பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் ரயில்களில் செல்லும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
இதற்காகவே, ரயில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைப்பது, ரயில்களின் பயண நேரங்களை அதிகரிப்பது உள்ளிட்டவைகளை தெற்கு ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தசரா உள்ளிட்ட தொடர் விடுமுறைகளுக்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் 'வந்தே பாரத்' ரயிலின் (ரயில் எண் 20643) பயண நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.
அதன்படி, 'சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்பட்டு சேலத்திற்கு 5.48 மணிக்கும், ஈரோட்டிற்கு 6.32 மணிக்கும், திருப்பூருக்கு 7.13 மணிக்கும் இறுதியாக, கோவை ரயில் நிலையத்திற்கு இரவு 8.15 மணிக்கும் சென்றடையும்' என்று கூறப்பட்டுள்ளது. பின்னர், மறுமார்க்கத்தில் கோவையிலிருந்து தினசரி காலை 6 மணிக்குப் புறப்பட்டு திருப்பூருக்கு 6.35 மணிக்கும், ஈரோட்டிற்கும் 7.12 மணிக்கும், சேலத்திற்கு 7.58 மணிக்கும் இறுதியாகச் சென்னை சென்ட்ரலுக்கு 11.50 மணிக்கும் வந்தடைகிறது.
மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலானது(MGR Chennai Ctrl to Coimbatore Jn Vande Bharat train), 8 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இதில், 7 பெட்டிகளில் ஏசியுடனும் மீதமுள்ள ஒரு பெட்டி எக்ஸ்க்ளூசிவ் ஏசி சேர் கார் ஆக பிங்க் நிறத்தில் இருக்கும். புதன் கிழமை தவிர, வாரத்தில் அனைத்து நாட்களில் இந்த இயக்கப்படும் இந்த ரயில் கோவை - சென்னை இடையே உள்ள 450 கிலோ மீட்டர் தூரத்தை 5.50 மணி நேரத்தில் கடந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"ககன்யான் திட்டத்தில் பெண் போர் விமானிகளை இஸ்ரோ அதிகளவில் எதிர்பார்க்கிறது" - சோமநாத் தகவல்!