சென்னை:கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் புகழ்பெற்றது. இங்கு கேரளா மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்தும், இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் விரதமிருந்து வருவதுண்டு.
இந்நிலையில், இந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் உள்ளது. இந்நிலையில், சபரிமலை மகரவிளக்கு பூஜைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலத்தின் கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அதன் X சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து, சென்னை எழும்பூர் நோக்கி செல்லும் சபரி சிறப்பு ரயில் (வண்டி எண் 06032), ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு இரவு 9.00 மணிக்கு வந்து சேரும்.
இதேபோல், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து சபரிமலை நோக்கி செல்லும் சபரி சிறப்பு ரயில் (வண்டி எண் 06031), சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 16ஆம் தேதி 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 5.00 மணிக்கு கொல்லம் சென்றடையும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலில் 2 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி, 5 மூன்றாம் ரக ஏசி பெட்டி, 1 மூன்றாம் வகுப்பு எக்கானமி ஏசி பெட்டி, 5 ஸ்லீப்பர் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 1 திவ்யாஞ்சன் பெட்டி, 1 சரக்கு வைப்பதற்கான பெட்டி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாக்குளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், எழும்பூர் ஆகிய ரயி ல்நிலையங்களில் நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே..