சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச. 2) காலை முதல் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி அன்று ஆந்திரா கடற்கரை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கும் நிலையில், நாளை (டிச. 4) வடதமிழகத்தில் தரைக்காற்று 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "டிசம்பர் 2ஆம் தேதி அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச.3) வடமேற்கு திசையில் நகர்ந்து காலை 05.30 மணி அளவில் 'மிக்ஜாம்(MICHAUNG)' புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்த புயலானது நாளை (டிச. 4) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழ்நாடு கடலோர பகுதிகளில் நிலவக்கூடும். அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து, முற்பகலில் தெற்கு ஆந்திரா கடற்கரையில் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும்.
அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்நிலையில் நாளை (டிச. 4) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழ்நாடு கடலோர பகுதிகளில் இந்த புயல் நிலவக்கூடும் என்பதனால் நாளை வடதமிழ்நாடு மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகரில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை(டிச. 4) மழைக்கான வாய்ப்புள்ள இடங்கள்: வடதமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயல்: ராணிப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!