தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் டிக்கெட் சலுகையால் 5,475 கோடி ரூபாய் இழப்பு - தெற்கு ரயில்வே உயர் நீதிமன்றத்தில் பதில்! - chennai high court

ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் வழங்கியதன் மூலம் கடந்த 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை சுமார் 5,475 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

hc
x

By

Published : Sep 17, 2020, 9:16 PM IST

சென்னை: ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் வழங்கியதன் மூலம் கடந்த 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை சுமார் 5,475 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிகள், விதவைகள், மாணவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணச் சலுகை வழங்க உத்தரவிடக்கோரி, திருச்சியைச் சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தெற்கு ரயில்வேயின் வர்த்தகப் பிரிவு துணை பொது மேலாளர் சுந்தர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 50 பிரிவினருக்கு 10 முதல் 100 சதவீதம் வரை கட்டண சலுகை ஏற்கனவே வழங்கப்படுகிறது.

ஆனால், கரோனா பேரிடர் காரணமாகவும், மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலும், பயணிகளின் தேவையற்ற பயணங்களை ஊக்குவிக்கக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 4 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் 11 வகையான நோயாளிகளுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே கட்டணச் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் எந்த வித சிக்கலும் இல்லாமல் பல நோயாளிகள் கட்டண சலுகைகளை பெற்றுள்ளனர். கட்டணச் சலுகைகள் வழங்கியதன் மூலம் கடந்த 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தெற்கு ரயில்வேக்கு சுமார் 5 ஆயிரத்து 475 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளைக்கு (செப்.18) ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details