மிக்ஜாம் என்பது மியான்மர் மொழி.. புயலுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தகவல் சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி டிச.4-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 80 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடுமென வடகிழக்கு பருவமழை குறித்த செய்தியாளர் சந்திப்பில் தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 4 தினங்களுக்கு வடதமிழ்நாடு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் உள்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும்(டிச.1,2) டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 3-ம் தேதியைப் பொறுத்தவரையில் திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
மீன்வர்களுக்கான எச்சரிக்கை: இந்நிலையில் அடுத்து வரும் 4 தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதி மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல், இன்று(டிச.1) வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 34 செ.மீ ஆகும். இந்த காலக்கட்டத்தில் ம்ழைப்பதிவின் இயல்பு அளவு 36 செ.மீ ஆகும். அந்த வகையில் இது இயல்பைவிட 6 சதவீதம் குறைவான மழைப்பொழிவே பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் நிலவரம்: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புயலை குறித்து அவர் பேசுகையில், "வங்ககடல் பகுதிகளில் புயல் சின்னம், அதாவது வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது" என தெரிவித்தார். மேலும் தற்போது நிலவியுள்ள புயலின் பெயரை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புயலுக்கு இன்னும் பெயரிடவில்லை என்றும், தற்போது இருக்கும் மிக்ஜாம் என்று குறிப்பிடுவது மியான்மர் மொழி" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:வங்கக்கடலில் புயல் சின்னம்: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!