தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சங்கம் தேர்தலை ஒத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை தற்போது நடத்தக் கூடாது என்ற பதிவுத்துறையின் உத்தரவை ஏற்று தேர்தலை தள்ளி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jun 19, 2019, 1:55 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடத்தப்படும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதில், நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர்கள் அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் ஶ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகின்றன.

சுமார் 3,100 சங்க உறுப்பினர்களை கொண்ட நடிகர் சங்கத்தின் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் ராஜா அண்ணாமலைபுரம் சாலையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தல் நடக்கும் இடத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க உரிய காவல்துறை பாதுகாப்பை வழங்க சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என நடிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாற்று இடத்தில் தேர்தலை நடத்துவது குறித்து நடிகர்கள் சங்கம் முடிவை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, பதிவுத்துறை சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், நடிகர் சங்க உறுப்பினர்கள் புகார் வழங்கியதன் அடிப்படையில் நடிகர் சங்க தேர்தலை 23ஆம் தேதி நடத்தக் கூடாது என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டதற்கான நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்தக் கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டிருப்பதை நீதிமன்றம் ஏற்று தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட்டார். மேலும், அதனால் தேர்தலுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details