தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் நிகழ்வில் பேசிய கார்த்தி சென்னை:தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மனோபாலா, மயில்சாமி மற்றும் டி.பி. கஜேந்திரன் ஆகியோரது நினைவேந்தல் நிகழ்வு சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில், மறைந்த மயில்சாமி, மனோபாலா, டி.பி. கஜேந்திரன் ஆகியோரது புகைப்படங்களுக்கு நடிகர்கள் அனைவரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது நடிகை சச்சு மேடையில் பேசுகையில், “இந்த வருடம் தொடங்கி அடுத்தடுத்த மரணசெய்தியால் மனம் மிகவும் சங்கடப்படுகிறது. இவ்வளவு வேலைப்பழுவிலும் நடிகர் சங்கம் நடத்தும் இவ்விழாவுக்கு வருகை தந்ததற்கு நன்றி. மனம் வருத்தமாக இருக்கிறது. எல்லோரது ஆத்மாவும் சாந்தியடைய வேண்டுகிறேன்” என்றார்.
நடிகர் கார்த்தி மேடையில் பேசுகையில், “மூன்று பேருமே மக்களை மகிழ்விப்பவர்கள். கஜேந்திரன் எப்போதும் சந்தோசமாக இருக்கக் கூடியவர். அவர் தவறினார் என்பது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மயில்சாமி, கடன் வாங்கி தானம் செய்யக்கூடியவர்; அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மனோபாலா, ஒரே நொடியில் அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். எந்த பொறுப்பையும் அவரே எடுத்துக் கொள்வார். ஈகோ இல்லாத மனிதர், ஈசியாக பழகக்கூடியவர், அற்புதமான மனிதர். இந்த மூவரையும் இழந்தது பெரிய வருத்தமாக உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பயணிப்போம். அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார்.
நடிகர் பொன்வண்ணன் மேடையில் பேசுகையில், “சில மரணங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. காஷ்மீரில் ஆசிபா குழந்தையின் மரணம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அனிதாவின் தற்கொலை மரணம் என் மனதில் பாதிப்பைத் தந்துள்ளது. ஆனால், இங்கு இருக்கும் மூன்று பேரின் மரணங்கள் நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்து விடுகிறது. மூன்று பேரும் என்னுடைய வயதில் திரைத்துறையில் பயணத்தைத் தொடங்கினோம். ஒரு முழுமையான மனிதனாக என்னை மாற்றிக்கொள்ள இவர்களின் இழப்பு பாதிப்பை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
நடிகை தேவயானி மேடையில் பேசுகையில், “மூன்று பேரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். இவர்கள் நமக்கு சொல்வது சந்தோசமாக இருங்கள், ஒற்றுமையாக இருங்கள் என்று எனக்கு தோன்றுகிறது” என்றார். தொடர்ந்து, மன்சூர் அலிகான், ராஜேஷ், வையாபுரி, அனுமோகன், உதயா ஆகியோரும் மேடையில் பேசி நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பாஜக சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டி - பவுலிங் செய்த நமீதா; ரசிகனாக மாறி ஆர்ப்பரித்த தொண்டர்கள்!