சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியில் அதி கனமழை பதிவான நிலையில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.
இதையடுத்து தற்போது மழை குறைந்துள்ள நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் முழு நகரமே ஸ்தம்பித்த நிலையில், மதுரை, திருநெல்வேலி என தென் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது தென் தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழையைச் சந்தித்த திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சென்னையிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெரியார் தொண்டறம் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுதற்கு முன்வருபவர்களின் நிவாரணம் மற்றும் உதவிப்பொருட்களை சேகரித்து கன்டெயினர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் கண்டெய்னர் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி தூத்துக்குடிக்கு மாவட்டத்திற்குச் செல்ல உள்ளது. இதைத்தொடர்ந்து கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்கள், அப்பகுதியில் இருக்கும் பெரியார் தொண்டறம் தன்னார்வலர்கள் மூலம் சென்னையிலிருந்து பொதுமக்கள் அனுப்புகின்ற பொருட்கள் உரிய முறையில் கொண்டு சேர்க்கப்படும் என்று சென்னையில் பெரியார் தொண்டறம் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மிக அதிக அளவில் உதவிகள் தேவைப்படுவதனால், பொதுமக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வருபவர்கள் வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் அமைந்துள்ள பெரியார் திடல் பகுதியில் இருக்கும் பெரியார் தொண்டறத்திடம் ஒப்படைக்கலாம் என்றும் மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள, முரளி - 9003319806, பிரின்ஸ் - 9444210999 ஆகியோர் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேவைப்படும் நிவாரணப் பொருட்கள் குறித்து, சில பொருட்களை வெளியிட்டுள்ளனர். அதில், பாய், போர்வை, பிஸ்கட்ஸ், பிரட் அல்லது ரஸ்க், துண்டு, நைட்டி, லுங்கி, பால்பவுடர், சானிடரி நாப்கின் மற்றும் உள்ளாடை, சோப்பு, சைபால், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டிகள், அரிசி, பருப்பு, உணவுப்பொருட்கள் உள்ளிட்டவை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “உயிரைத் தவிர ஒன்றுமே இல்லை; புத்தகங்கள் இல்லை.. கல்லூரி கட்டணமும் இல்லை” நெல்லை மக்களின் கண்ணீர் புலம்பல்!