சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் மாநில அரசின் முக்கிய பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த போட்டித் தேர்வுகளை நம்பி பல லட்சம் பேர் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-1 முதல் குரூப்-8 வரையிலான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கான உத்தேச ஆண்டு அட்டவணை வெளியிடப்படும்.
டிஎன்பிஎஸ்சி 2023 தேர்வு அட்டவணை:நேற்று (டிச.15) டிஎன்பிஎஸ்சி 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதில், 11 தேர்வுகளுக்கு உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்ட 12 பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடைபெறும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பொறியியல் சேவைப் பணிகளில் 828 காலிப் பணியிடங்களும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணியிடங்களில் 762 இடங்களும், சுற்றுலாத் துறையில் உதவி அலுவலர் பணி நிலை 2ல் 17 பணியிடங்களும், உதவி புவியியலாளர் பணியிடங்களில் 19 இடங்களும், விளையாட்டு இயக்குனர் பணியில் 12 இடங்களும், தமிழ்நாடு கால்நடை சேவை துறையில் உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தில் 5 இடங்களும், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் சேவை 101 இடங்களும் என 11 பிரிவுகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 2022ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு மற்றும் கலந்தாய்வுகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குரூப் -4 பணியிடங்களில் ஆட்கள் சேருவதற்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 2024ஆம் ஆண்டில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், ஜூலை 2024இல் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தியில் தேர்வர்கள்:டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நம்பி தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரையிலான அனைத்து வகுப்புகளிலும் உள்ள புத்தகங்களைப் பெற்று படித்து வருகிறார்கள், லட்சக்கணக்கான தேர்வர்கள். இவர்களை அதிகளவிலான கட்டணம் செலுத்தி அரசுத் தேர்வு பயிற்சி நிறுவனங்களில் பார்க்கலாம்.
அது மட்டுமல்லாமல் ரயில்வே நடைமேடைகள், நூலக வளாகங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு பொது வெளிகளிலும் பள்ளி பாட புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ தேர்வர்களை பார்க்கலாம். இவ்வாறான டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் மிகுந்த எதிர்பார்ப்புதான், குரூப் 4 தேர்வு. இதற்கான முதன்மை காரணம், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கல்வித்தகுதி என்பது 10ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே.
எனவே பல தேர்வர்களும் தங்களது அரசுத் தேர்வு கனவு பட்டியலில் நம்பர் 1 இடத்தில் வைத்திருப்பது, இந்த குரூப் 4 தேர்வுதான். ஆனால் இந்த குரூப் 4 தேர்வுக்கு 2024ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இது அரசுப்பணிக்காகக் காத்திருக்கும் பல்வேறு தேர்வர்களுக்கு ஏமாற்றமாக மாறிவிட்டது.
டிஎன்பிஎஸ்சி 2023 தேர்வு அட்டவணை வெளியானபின் இணையத்தில் உலாவும் மீம்ஸ்
வாழ்க்கை இப்படியே போய்டுமா சார்..தற்போது வெளியான டிஎன்பிஎஸ்சி 2023 தேர்வு அட்டவணையில், 'குரூப் 1ம் இல்ல.. குரூப் 2ம் இல்ல.. குரூப் 4ம் இல்ல..’ என விரக்தியில் வெளியான மீம்ஸ் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது. அதேநேரம் ’எம்.எஸ்.தோனி’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘வாழ்க்கை இப்படியே போய்டுமா சார்..’ என்பதை வைத்தும் மீம்ஸ் மூலம் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இதில் சில 90ஸ் கிட்ஸ்கள், ‘இந்த கையில அப்பாயிண்ட் ஆர்டர்.. அந்த கையிலா பொண்ணு’ என்கிற வசனத்தை வைத்து, அரசு வேலை இல்லாமல் திருமணம் எப்படி நடக்கும் என்பதுபோலவும் பதிவிட்டு வருகின்றனர். இதனை மீம்ஸ்களாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும், தேர்வர்களுக்கு கசப்பினையே கொடுத்துள்ளது.
திடீர் நியமனம்:டிஎன்பிஎஸ்சி 2023 தேர்வு அட்டவணை அதிருப்திக்கு மத்தியில், பல மாதங்களாக கலியாக இருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம் செய்யப்பட்டது திருப்புமுனையை உண்டாக்கியுள்ளது. ஏனென்றால் முன்னதாக டிஎன்பிஎஸ்சி-யின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த கிரண் குராலா, பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டார். எனவே டிஎன்பிஎஸ்சி செயலாளா் பி.உமா மகேஸ்வரி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகக் கூடுதல் பொறுப்பிலிருந்து வந்தார். இந்த நிலையில் கலியாக இருந்த டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஜய் யாதவ்
மூன்றில் ஒரு பங்கு என்பது போதுமானதல்ல:டிஎன்பிஎஸ்சி 2023 தேர்வு அட்டவணையில் குரூப் 4 தேர்வு தவிர்த்து, மொத்தமே 1,754 காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே நியமனம் என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “1,754 பணியிடங்கள் மட்டும்தான் என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல.
அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை, நவம்பர் 30 நிலவரப்படி 67.61 லட்சம் பேர் என தமிழ்நாடு அரசே தெரிவித்திருக்கிறது. 2022ஆம் ஆண்டில் 30 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு அளவில் 11 போட்டித் தேர்வுகள் அறிவித்திருப்பது நியாயமல்ல.
திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் மற்றும் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் 1.30 லட்சம் பேர் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
குறைவான நியமனத்துக்கு பாமக நிறுவனம் ராமதாஸ் கண்டனம்
தேர்வர்களின் கோரிக்கை:எவ்வறாயினும், 20 லட்சம் தேர்வர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வெறும் 1,754 பணியிடங்கள் என்பது அனு அளவாகவே தெரிகிறது. எனவே தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்தி, தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே லட்சக்கணக்கான தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:2023ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு – கால அட்டவணை வெளியீடு