சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த வருடம் கரும்பு உடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை அரசு வழங்கியது.
ஆனால், வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.