சென்னை:தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் புள்ளி விபர கணக்கெடுப்பு நடைபெறுவதற்காகத் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது.
அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் துவக்கப்பட்டுத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குனர் 3-ஆம் தேதி நடத்திய கூட்டத்தில், ’ஒரே வளாகத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகளில் அமைந்துள்ள சத்துணவு மையங்கள் விபரம் ஏற்கனவே அனுப்பி உள்ளீர்கள். அதனை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து சத்துணவு மையங்களையும் கணக்கில் கொண்டு, வட்டாரத்தைபொறுத்தவரை ஊராட்சியினை அடிப்படையாகவும், மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை அடிப்படையாக கொண்டு ஒரு பொது சத்துணவு மையத்தினை தேர்வு செய்து, அதனை சுற்றி 3 கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள சத்துணவு மையங்கள் விபரத்தினை புள்ளி விபரமாகவும், வரைப்படத்திலும் பொருத்தி அனுப்பிட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் பேயத்தேவன் கூறியுள்ளதாவது, “2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தல் பணியில் உள்ள மற்றும் பணி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்குத் தேர்தல் வாக்குறுதியாக இன்றய தமிழகமுதல்வர் தேர்தல் வாக்குறுதியாக பணியில் உள்ள ஊழியர்களை அரசுப் பணியாளராக்கி ஊதிய உயர்வும் பதவி உயர்வும் வழங்கப்படும்.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடை 5 லட்சமும் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கபட்டது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து வந்து 2 வருடத்தினை நெருங்கி வருகிறது. ஆனாலும் தேர்தல் வாக்குறுதி ஏட்டளவிலேயே உள்ளது. எப்போது நிறைவேற்றபடும் என்று கூட சொல்வதற்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை என்ற நிலைதான் உள்ளது பலநினைவூட்டு இயக்கங்கள் நடத்திய பின்னும் கூட எந்தவித முன்னேற்றமும் இல்லை.
தேர்தல் வாக்குறுதி ஒரு பக்கமிருக்க காலி பணியிடங்கள் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிரப்பப்படவில்லை. தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை மகளிர் சுய உதவிக்குழு மூலம் செயல்படுத்துவோம் என அரசாணை வெளியிட்டது. ஆனால் சென்ட்ரல் கிச்சன்முறையில் வைத்துச் சமைத்து வழங்கப்படும் என உத்தரவிட்டபோதே சத்துணவுத் திட்ட காலி பணியிடங்களை நிரப்பப் போவதில்லை என தெரியவந்தது.
தற்போது அதற்கான அரசின் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது ஒரே வளாகத்தில் உள்ள மையங்கள் 3 கி.மீஅதனைச் சுற்றியுள்ள மையங்கள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிகிறது . தமிழ்நாட்டில் 43 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்களில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு தற்போது முடிவெடுத்துள்ளபடி 85ஆயிரம் பணியிடங்கள் காலியாகும் நிலை ஏற்படும் வாய்ப்புக்களுள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் முற்றிலும் ஒழிந்துவிடும்.