தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Erode East By Poll: பொது வேட்பாளரை நிறுத்த பாஜக முயற்சி! - nda alliance

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த உள்ளதாக சிடி ரவியின் அறிவிப்பில் இருந்து தெரிய வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Erode East By Poll: பொது வேட்பாளரை நிறுத்த பாஜக முயற்சி
Erode East By Poll: பொது வேட்பாளரை நிறுத்த பாஜக முயற்சி

By

Published : Feb 3, 2023, 12:42 PM IST

Updated : Feb 3, 2023, 2:38 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தமிழ்நாடு பாஜக தரப்பில் செய்தியாளர் சந்திப்பு

சென்னை:கடந்த ஜனவரி 4ஆம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மரணமடைந்தார். இதனால் பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல் இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காகத் தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுக, தனது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இருப்பினும், அதிமுக பொதுக்குழு வழக்கால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் என்ற இரு அணிகளாகப் பிரிந்துள்ளதால், இரு தரப்பினரும் தமிழ்நாடு பாஜக தலைமையகத்தில் வைத்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்தித்தனர். இதனையடுத்து இருவரும் தனித்தனியாக தங்களது வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதில், ஓபிஎஸ் தரப்பு மட்டும், பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தங்களது வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இதனிடையே அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு ஆகியவை குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இன்று (பிப்.3) காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைத்து சிடி ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணைந்து செயல்படுமாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை இருவரிடமும் வலியுறுத்தினோம்.

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். அதிமுகவைத் தொடங்கும்போது திமுகவை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ‘தீயசக்தி’ என அழைத்தார். அதனையே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தேர்தலில் பிரதிபலித்தார். இடைத்தேர்தலில் திமுக தோல்வியைச் சந்திக்கும். திமுகவை எதிர்க்க வலிமையான வேட்பாளர் தேவை. மேலும் பிப்ரவரி 7 வரை வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் இருப்பதால் பாஜகவின் நிலைப்பாடு குறித்து பின்னர் அறிவிப்போம்” என்றார்.

இதன் மூலம் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார் என்பதும், நேற்றைய முன்தினம் அண்ணாமலை டெல்லி சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழக பாஜகவின் புதிய திட்டம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் தனித்தனியாக ஆலோசனை!

Last Updated : Feb 3, 2023, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details