தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த விக்கெட் அவுட்.. ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி! - ops

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி அணியில் இணைந்துள்ளது ஓபிஎஸ் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 10, 2023, 7:50 AM IST

சென்னை:அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான யுத்தத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் 'இரட்டை இலை சின்னம்' எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒதுக்கப்பட்டது என்பது ஓ.பி.எஸ் தரப்பினருக்குப் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு ஒதுக்கப்பட்டு பொதுக்குழு மூலம் கே.எஸ்.தென்னரசு அதிமுக வேட்பாளராகத் தேர்வு செய்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் தனது மனுவைத் திரும்பப் பெறுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இருப்பினும் வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்குமுன்பே, பரிசீலனையின்போதே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஒரே வேட்பாளராக இரட்டை இலையில் போட்டியிட்டாலும் அதிமுக ஈரோடு கிழக்கு தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது. செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்ததால் இவர் பெயர் ஓரளவுக்கு மக்களிடையே ஒலிக்கத் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர் வியாழன் அன்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவர் அணியில் சேர்ந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன். கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ரூ.312.37 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

இதனால் ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,"கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், செந்தில் முருகன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒருபடி முன்னே செல்லும் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை தங்கள் வசம் கொண்டுவந்தது ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 12 ஆண்டுகால பணிகள் விரைவில் நிறைவு! பயன்பாட்டுக்கு வருகிறது ராதா நகர் சுரங்கப்பாதை?

ABOUT THE AUTHOR

...view details