சென்னை: சித்தா மருத்துவர் ஷர்மிகா யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளம் வாயிலாகக் குழந்தை பிறப்பு, கர்ப்பம், உடல் எடை அதிகரிப்பு, உடல் எடை குறைப்பு, மலட்டுத்தன்மை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வு என்ற பெயரில் பல்வேறு வீடியோக்கள் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்களை பலரும் பார்த்து ரசித்து வந்தனர். 'நீங்கள் சொல்லும் டிப்ஸ் எளிமையாகவும், புரியும் படியும் இருக்கும் மேடம் அருமை மேடம்' என்றும் ஒரு சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாகப் பேசிய சில காணொளிகள் இணையத்தில் வைரலாக பரவியது. குலோப்ஜாம் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும், தலைக்குப்புற படுத்துத் தூங்கினால் மார்பக புற்றுநோய் வராது. கடவுள் மனசு வைத்தால் தான் குழந்தை உருவாகும், பனை நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் இப்படி பல்வேறு கருத்துக்கள் கொண்ட வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஷர்மிகாவின் இந்த வீடியோவுக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிகா, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும், குலோப்ஜாம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் போன்ற கருத்துக்கள் 'ஹூமன் எரர்' வாய்த் தவறி வந்துவிட்டது. அந்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.