சென்னை:கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டது. அதில் கோவை தெற்கு, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று, 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் பாஜக நுழைந்தது.
தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத்தலைமை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற இருக்கிறது என்ற நிலை மாறி, தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி பேச்சுவார்த்தை: பாஜக தலைவர் அண்ணாமலை, "வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் வெற்றி அடைவோம்" என கூறி கொண்டே வரும் நிகழ்வு, பாஜக தனித்து போட்டியிட தயார் நிலையில் உள்ளது என்ற தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்த பின்னர் அண்ணாமலையின் நடவடிக்கையில் அதிகளவு மாற்றங்கள் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலை, மாவட்ட தலைவர்களை வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் டெல்லியில் தமிழ்நாடு அரசியல் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் 6 இடங்களுக்கு மேல் நம்மால் பெற முடியாது.
அப்படி பெற்றாலும் அதில் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடியும். ஆனால் தனித்து போட்டியிடும் பட்சத்தில் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம்" என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து தனித்து போட்டியிடுவதற்காக வேலைகளை அண்ணாமலை தீவிரப்படுத்தியுள்ளார்.
ஓபிஎஸ் வாழ்க, இபிஎஸ் வாழ்க என கூற முடியாது: கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக சார்பில் சிந்தனையாளர் பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, "2024 நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், 'ஓபிஎஸ் வாழ்க, இபிஎஸ் வாழ்க' என்ற கோஷத்தை நாம் எழுப்ப முடியாது.
அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருவரும் இப்படி பிரிந்திருந்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை இல்லாமல், ஏதோ ஒரு அணியுடன் கூட்டணி வைத்தால் மக்கள் நம்மை ஏற்க மாட்டார்கள்.
தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்கு பெற்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் 80 இடங்களை கைப்பற்றி விடலாம்" என கூறினார். இதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான வேலைகளில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். ஒற்றைத்தலைமை விவகாரத்தில் அதிமுக பிரிந்திருக்கிறது.