சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் நான்கு முனை போட்டி ஏற்பட்டாலும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும், அதிமுகவுக்கும்தான் கடுமையான போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில், ஆளும் திமுகவிற்கு 21 மாத ஆட்சியின் மதிப்பீடாகவும், அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமையை நிரூபிக்கும் பொருட்டாகவும் கருதப்படுகிறது.
இதனையொட்டி ஆளும் கட்சியான திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காகப் பல முறைகேடு செயல்களில் ஈடுபடுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இடைத்தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திலும், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், சரியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு கொடுத்திருந்தனர்.
இதில், தேர்தலுக்கான பணிகள் முறையாக நடைபெறுவதாகத் தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து சிவி சண்முகம் தொடுத்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை வரலாறு காணாத பணம் செலவு செய்யப்படுவதாகச் சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கூறி இருந்தனர்.
மேலும் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த இடைத்தேர்தலில் பல முயற்சிகளை ஆளும் திமுக எடுத்துள்ளதாக, அதிமுக மற்றும் அதனுடைய கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகரில் வேட்பாளராகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் தரப்பினர் வாக்குக்கு 4,000 ரூபாய் வழங்குகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில், ஒரு நாளைக்கு ஒரு வாக்குக்கு 2,000 ரூபாய் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குக்கர் மற்றும் கொலுசு போன்ற குடும்பத் தலைவிகளைக் கவரும் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக இருக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அது மட்டுமில்லாமல், வாக்காளர்கள் அடைத்து வைக்கப்பட்டு காலையில் 500 ரூபாயும், மாலையில் 500 ரூபாய் உடன் கறி விருந்து, புதிய படங்கள் திரையிடல் போன்றவற்றில் திமுகவினர் ஈடுபடுவதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே திமுகவினர் இடைத்தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக பாஜகவினர் ஆதாரத்துடன் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அனுமதியின்றி 14 பணிமனைகள் செயல்படுவதாகத் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க கோரி கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.