சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக எம்.பி தம்பிதுரை சந்தித்தார். இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று தம்பிதுரை தரப்பில் கூறப்பட்டாலும் அதிமுக - பாஜக கூட்டணி இடையே கருத்து மோதல், கர்நாடகா தேர்தல், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று விடாப்பிடியாக இருக்கிறார். ஆனால் ஈபிஎஸ்ஸை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும், ஈபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடியவர்கள் மேல் உள்ள வழக்கு போன்ற காரணங்களுக்காக அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கர்நாடகா தேர்தலை மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமி எம்.பி.தம்பிதுரையின் மூலம் சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளார். கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலை மிக முக்கியமாக பாஜக கருதுகிறது.
கர்நாடகாவில் அதிமுக என்று சில பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் செயல்படும் பாஜக, யாருடைய வாக்குகளையும் இழக்க விரும்பவில்லை. அதனால் அங்குள்ள சிறு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்து வருகிறது. இதையும் ஒரு காரணமாக வைத்து தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்வதாக அமித்ஷா பேசியுள்ளார் என கூறப்படுகிறது.