சென்னை:தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக - பாஜக கூட்டணி இடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டன. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகதான் காரணம் என அதிமுகவில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிய கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 2021-ல் தேர்தல் முடிந்த பின்னர் பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, திமுக மீது குற்றச்சாட்டு, பொதுக்கூட்டம், போராட்டம் என நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று பொதுவெளியில் பேசும் அளவிற்கு செயல்பட்டு கொண்டிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "பாஜகவுடன் திமுக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது" என கூறியிருந்தார். அப்போது இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "சி.வி.சண்முகம் எப்போது பாஜகவில் சேர்ந்தார். பாஜகவின் கூட்டணி நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு அவர் யார்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதிமுகவிற்கும், பாஜகவிற்கு இங்கே இருந்துதான் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கின. அப்போது இருந்தே அண்ணாமலை தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பின்னர், "எத்தனை நாட்களுக்கு தான் ஓபிஎஸ் வாழ்க, ஈபிஎஸ் வாழ்க என்று கோஷம் போடுவது, தமக்கென்று ஒரு வாக்கு சதவீதத்தை உருவாக்க தனித்துப் போட்டியிட தயாராகுங்கள்" என அண்ணாமலை நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருந்தார்.
இதற்கு, அதிமுக தரப்பில், "அவர் அவர் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது சாதாரணம். அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது" என பதிலளிக்கப்பட்டது. அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு தரப்பிற்கும் பொதுவாகவே பாஜக செயல்பட்டது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜகவின் கடைக்கண் பார்வை தன் மீது விழாதா என இரண்டு தரப்பும் எதிர்பார்த்தது. நீதிமன்றங்களில் வழக்குகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை என்று இரண்டு தரப்பும் செயல்பட்டு கொண்டிருந்த போது ஈரோடு கிழக்கில் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் 2021-ல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனிடம் பேசி தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக முயற்சி செய்ததாக கூறப்பட்டது. பின்னர், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஜி.கே.வாசனை வைத்தே அதிமுக போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலை காரணமாக வைத்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு தரப்பையும் ஒன்றிணைக்க பாஜக ஒரு முயற்சி எடுத்தது. ஆனால் பாஜகவின் இந்த முயற்சியை ஈபிஎஸ் தரப்பினர் விரும்பவில்லை.
இடைத்தேர்தலில் உச்சநீதிமன்றம் வரை சென்று இரட்டை இலையை பெற்ற எடப்பாடி தரப்பினர், ஈரோடு கிழக்கில் முஸ்லீம் வாக்குகள் பெருமளவில் இருந்ததால் பாஜகவினர் பிரச்சாரத்திற்கு வருவதற்கு விரும்பவில்லை என கூறப்படுகிறது. "அண்ணாமலை தனியாக பிரச்சாரம் செய்வார், நான் தனியாக பிரச்சாரம் செய்வேன்" என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கில் 66,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் அதிமுக தோல்வியை தழுவியது. "பாஜக கூட்டணியில் இருந்ததால் 43,000 முஸ்லீம் வாக்குகளை இழந்துள்ளோம். இதுவே தோல்விக்கு காரணம்" என ஈபிஎஸ் தரப்பு செங்கோட்டையன் கூறிய கருத்து கூட்டணி இடையே புயலை கிளப்பியது.
கடந்த மாதம் பாஜகவின் மாநில பொறுப்பில் இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு அதிமுக, பாஜகவில் இருக்கக்கூடிய இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு இடையில் உச்சகட்ட கருத்து மோதலை ஏற்படுத்தியது. "நான்கு ஆண்டுகள் எங்களால்தான் ஆட்சியில் இருந்தீர்கள், கூட்டணிக்காக ஏன் கமலாலயம் வந்தீர்கள்" என பாஜகவினர் பேச, ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் எரிப்பு வரை இந்த விவகாரம் சென்றது. இதற்கு "அண்ணாமலை பக்குவப்பட வேண்டும், பாஜகவின் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும், அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் தாங்காது" என அதிமுக தரப்பில் பதிலளிக்கப்பட்டது.