சென்னை: அமைந்தகரை மேத்தா நகர் திருவள்ளுவர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர், இம்ரான் (25).
இவரது தாய் சுலேகா மலேசியாவில் உள்ளார். இம்ரான் அமைந்தகரையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பணம் கேட்டு மிரட்டிய கடத்தல் கும்பல்:
இந்நிலையில் நேற்று (ஜூலை 07) காலை இம்ரான் வீட்டிலிருந்தபோது அங்கு வந்த நான்கு பேர் இம்ரானிடம் பேச வேண்டும் எனக்கூறி வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அந்தக் கும்பல் இம்ரானை காரில் கடத்திச் சென்றனர்.
மாலை மலேசியாவிலுள்ள இம்ரானின் தாய் சுலேகாவைத் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் தங்கள் மகனை கடத்திவிட்டதாகவும், அவரை விடுவிக்க 50 லட்சம் ரூபாய் பணம் வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனால், பயந்துபோன இம்ரானின் தாய் சுலேகா உடனே இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் புகார் அளித்தார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் உத்தரவின் அடிப்படையில் அமைந்தகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடத்தல் கும்பலை டிரேஸ் செய்த காவல் துறை:
மேலும், கடத்தல்காரர்கள் செல்போன் எண்ணை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை டிரேஸ் செய்தபோது கடத்தல்காரர்கள் இம்ரானின் வீட்டின் அருகே இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து இம்ரான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு, அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் தேடினர்.