சென்னை: திருவெற்றியூர் விம்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். திமுக நிர்வாகியான இவர் பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி காலை அவரது அலுவலகத்தில் இருந்தபோது மர்ம கும்பல் ஒன்று பட்டாகத்தியால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இந்த விவகாரம் தொடர்பாக எண்ணூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக எண்ணூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் உட்பட 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 6 பேரையும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இரண்டு லட்சம் ரூபாய் மாம்பூல், கேட்டும் தராததால் கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்தனர். மேலும் மாதம் மாதம் ஒழுங்காக மாமுல் தராதவர்களுக்கு பயம் ஏற்படுத்தவே கொலை செய்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை கேர் டேக்கர் வேலைக்கு வந்த பெண் காதலனோடு கைவரிசை: கோயம்பேடு பகுதியில் ஆயிஷா சுல்தான் என்கின்ற 73 வயது நிறைந்த மூதாட்டியில் வீட்டில் கேர் டேக்கராக பணியாற்றி வந்தார் சாகின். ஆயிஷா சுல்தான் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், சாகின் அவரது காதலன் பிரகாஷுடன் சேர்ந்து அவரை கட்டிப்போட்டு ஆயிஷா அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை, இரண்டு செல்போன்கள் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்று உள்ளனர். இது குறித்து ஆயிஷா சுல்தான் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கேர் டேக்கர் வேலைக்கு வரும் பெண்களிடம் தீவிர விசாரணைக்கு பிறகே பணியமர்த்த வேண்டும் என பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.