சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு (செப்.19) 8.45 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 145 பயணிகளுடன் பயணித்த இந்த விமானம், சென்னைக்கு நள்ளிரவு 11.50 மணிக்கு வந்து சேர்ந்தது.
இந்த நிலையில், இவ்விமானம் டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஓடு பாதையில் ஓடத் தொடங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த மணிகண்டன் என்ற ராணுவ வீரர் ஒருவர் விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விமான பணிப்பெண்கள் ராணுவ வீரர் மணிகண்டனிடம், “இது விமானத்தின் அவசரகால கதவு. இதை நீங்கள் திறக்கக் கூடாது” என்று எச்சரித்து கண்டித்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நள்ளிரவு (செப்.19) 11.50 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி ராணுவ வீரர் மணிகண்டனிடம், டெல்லியில் விமானம் புறப்படும்போது விமானத்தில் இருந்த அவசர கால கதவைத் திறக்க முயன்றதாக அவர் மீது புகார் வந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.