சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துவோரின் விவரங்களை வழங்க முடியும் - ஐஐடி பேராசிரியர் மதுசூதனன் - ஃபேஸ்புக்
சென்னை: சமூக வலைதளங்களில் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களின் விவரங்களை அந்த நிறுவனங்களால் வழங்க முடியும் என ஐஐடி பேராசிரியர் மதுசூதனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை எளிதில் அடையாளம் காண, சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆன்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாட்ஸ்அப் தரப்பில், யூ டியூப் தளங்களில் வீடியோக்கள் வாட்ஸ்அப் மூலம் பகிரப்படுவதற்கு அந்நிறுவனம் எப்படி பொறுப்பேற்க முடியும் என கேள்வி எழுப்பியது. மேலும், 500 கோடி மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வரும் நிலையில், குற்றச்செயல் புரிபவர்கள் யார் எனக் கண்டறிந்து தகவல்களை வழங்குவது இயலாத ஒன்று என ஃபேஸ்புக் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில், தகவல் தொழில்நுட்ப வல்லுநரும், ஐஐடி பேராசிரியருமான மதுசூதனன் ஆஜராகி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள் வரிசையில் வருகின்றன. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கும்போது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் அந்த நிறுவனங்கள் செயல்பட வேண்டும். வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தகவல்களை ஃபார்வேர்ட் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.
அதே போல் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை சமூக வலைதள நிறுவனங்களால் அரசுக்கு வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சமூக வலைதளங்களில் குற்றம் புரிவோரின் தகவல்களை பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்த விவரங்களை ஐஐடி பேராசிரியர் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதே வேளையில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தமிழ்நாடு அரசு கேட்கும் தகவல்களை எவ்வாறு வழங்க முடியும் என்பது குறித்து அந்தந்த நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆக்ஸ்ட் 21ஆம் தேதி ஒத்திவைத்தனர்.