இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சென்னை ஐஐடி உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற ஐந்து ஐ.ஐ.டிகளில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மிகப்பெரிய சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை புறக்கணித்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு 72.10% இடங்கள் நிரப்பப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
சென்னை, டெல்லி, மும்பை, கரக்பூர், கான்பூர் ஆகிய 5 நகரங்களில் உள்ள ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் சிவில், எந்திரவியல், மின்னியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், அவர்கள் தேர்வு செய்யப்பட்ட முறை ஆகியவற்றை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெற்று ஆய்வு செய்ததில், அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன. இந்த காலத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 19.50% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இது அந்த பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டிய 27% இட ஒதுக்கீட்டில் மூன்றில் இரு பங்கு மட்டுமே ஆகும்.
மோசமான சமூகநீதி சூறையாடல்
அதேபோல் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட வேண்டிய 15% இட ஒதுக்கீட்டில் பாதிக்கும் குறைவாக 7.30% இடங்களும், பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டிய 7.50% இட ஒதுக்கீட்டில் ஆறில் ஒரு பங்கிற்கும் குறைவாக 1.20% இடங்களும் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்பப்பட வேண்டிய 50.50% இடங்களுக்குப் பதிலாக 72.10% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களும் கூட தகுதியின் அடிப்படையில் அனைத்துப் பிரிவினரையும் கொண்டு நிரப்பப்படுவதற்கு மாற்றாக, எந்த வரைமுறையும் இல்லாமல் முழுக்க முழுக்க உயர்சாதியினரைக் கொண்டு நிரப்பப்பட்டிருக்கின்றன. இதை விட மோசமான சமூகநீதி சூறையாடல் இருக்க முடியாது.
வழக்கமாக ஐஐடி மாணவர் சேர்க்கையாக இருந்தாலும், ஆசிரியர்கள் நியமனங்களாக இருந்தாலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததற்கு ஐ.ஐ.டி நிர்வாகங்கள் சார்பில் கூறப்படும் காரணம் தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்பதே ஆகும். இது அப்பட்டமான பொய் என்பது முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கை விவகாரத்தில் உறுதி ஆகியுள்ளது. முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 27% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமானால், 885 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும். முனைவர் பட்ட ஆய்வுக்கு 885 பேர் விண்ணப்பித்திருந்தால் அவர்கள் அனைவருக்குமே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் மட்டுமே, முனைவர் ஆய்வுக்கு தகுதியான மாணவர்கள் இல்லை என்ற காரணம் எழ வேண்டும்.