சென்னை: குற்றத்தை தட்டிக்கேட்கும் இடத்தில் உள்ள காவல்துறையினர் முறையாக சட்டத்தை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பல சமூக ஆர்வலர்கள் மூலம் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் ஒருவரிடம் காவலர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்களிடம் முறையாக அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி விவரங்களை கேட்டிருந்தார்.
குறிப்பாக 2019ஆம் ஆண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்கள் எத்தனை பேர்? அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு? என்பது குறித்து பதில்கோரி பதிவு செய்திருந்தார்.
இவரது ஆர்.டி.ஐ விண்ணப்பத்தை ஏற்று பதிலளித்துள்ள போக்குவரத்து திட்டப்பிரிவு துணை ஆணையர் ஹர்ஷ் சிங், கடந்த 2019ஆம் ஆண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்களின் மொத்த எண்ணிக்கை 29. அதில் 18 பேரிடம் மொத்தம் 1800 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 11 காவலர்களிடம் இன்னும் அபராதம் வசூல் செய்யப்படவில்லை எனவும் பதிலளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டும் சமூக ஆர்வலர் காசிமாயன் இதே கேள்விகளை முன்வைத்து ஆர்.டி.ஐ மனு ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அப்போது அந்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், அப்போது போக்குவரத்து திட்டத்துறை கூடுதல் துணை ஆணையராக இருந்த திருவேங்கடம் அளித்த பதில் மனுவில், 2019ஆம் ஆண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்களின் மொத்த எண்ணிக்கை 65 பேர் எனவும், அதில் 41 பேரிடம் அபராதமாக 4100 ரூபாய் வசூலிக்கப்பட்டு, 24 காவலர்களிடம் இன்னும் அபராதத் தொகை வசூலிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.