சென்னை: திருவல்லிக்கேணி வெங்கடாச்சலம் நாயகன் தெருவைச் சேர்ந்த விஜய குமார் (38), வருத்தப்படாத வாக்காளர் சங்கத்தைத் தொடங்கி, அதன்மூலம் பொதுசேவைகளில் ஈடுபட்டுவருகிறார்.
இவர், சென்னை காவல் ஆணையருக்கு, வாட்ஸ்அப் மூலமாகப் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில், "திருவல்லிக்கேணி 116ஆவது வார்டுக்குள்பட்ட கற்பக கன்னியம்மன் கோயில் 3ஆவது தெருவில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுவருகிறது.
இங்கு கடந்த 12ஆம் தேதி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டது. தகவலறிந்து அங்கு நான் சென்று பார்த்தபோது, மாநகராட்சிக்குச் சொந்தமான சாலை சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குநருக்கு தொலைபேசி மூலம் புகார் அளித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் அப்பணியைத் தடுத்தேன். மீண்டும் அவர்கள் கழிவுநீர் இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டதால், மீண்டும் அலுவலர்களுக்கு புகார் அளித்தேன்.
அடுத்த 10 நிமிடங்களுக்குள் திமுக பகுதிச் செயலாளர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ் என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார். தொடர்ந்து பல்வேறு எண்களிலிருந்து கொலை மிரட்டல் வந்தவண்ணம் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு (ஜூன் 14) அடையாளம் தெரியாத நபர்கள் என் வீட்டிற்கு வந்து, என் குடும்பத்தினரிடம் என்னைப்பற்றி விசாரித்துவிட்டு, திமுக பகுதிச் செயலாளர் ஏ.ஆர்.பி.எம். காமராஜை நேரில் வந்து சந்திக்காவிட்டால், குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் விஜய குமார் பேசிய காணொலி பொதுநலன் கருதி செயல்பட்ட தன்னை மிரட்டும், திமுக பகுதிச் செயலாளர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். புகாருடன் சட்டவிரோத செயல் நடைபெற்றதற்கான புகைப்பட ஆதாரம், கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ உள்ளிட்டவற்றையும் அவர் இணைத்துள்ளார்.
இதையும் படிங்க: 2024 மக்களவைத் தேர்தல்: வேலையை ஆரம்பித்த பாஜக!